15 March, 2011

டீ.எஸ்.எஸ்.சி (DSSC)

DSSC என்பது Dye Sensitized Solar Cell என்பதன் சுருக்கம். DSSC (டீ.எஸ்.எஸ்.சி. ) வகை செல்களில் ‘டைடானியம் டைஆக்சைடு” என்ற ஒரு குறைகடத்தி பயன்படுகிறது. ஆனால், அதனால் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவது முடியாது. அதில் சரியான சாயத்தை பூசினால், சாயம் சூரிய ஒளியை வாங்கி, எலக்ட்ரானை டைடானியம் டை ஆக்சைடுக்கு தரும். இதற்கு ‘டீ. எஸ். சி.’ (DSC) என்றும், கிரேட்சல் செல் (Graetzel Cell) என்றும் வேறு பெயர்கள் உண்டு. இந்த வகை செல்களை முதலில் கண்டுபிடித்தவர் சுவிட்சர்லாந்தை சேர்ந்த மைக்கேல் கிரேட்சல் (Michael Graetzel) என்பவராவார். அதனால், இதற்கு ‘கிரேட்சல் செல்’ என்றும் பெயர்.

சிலிக்கன், காட்மியம் டெலுரைடு, சி.ஐ.ஜி.எஸ். போன்ற சோலார் செல்களுக்கும், DSC செல்களுக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. மற்ற எல்லா செல்களிலும் 'P-type' மற்றும் 'N-type' என்று இரண்டு வகை குறைகடத்திகள் இருக்கும். அவற்றில் ‘எலெக்ட்ரான்கள்’ மற்றும் ‘துளைகள் அல்லது holes' என்பவை மூலம் மின்சாரம் செல்லும். ஆனால் DSC செல்லில், ஒரே ஒரு குறைகடத்தி (TiO2) தான் இருக்கும். இதன் வழியாக எலக்ட்ரான் மட்டும்தான் செல்லும். இதில் துளைகள் (holes) கிடையாது. DSC செல்களில் சில சமயம் ‘ஜெல்’ போன்ற பொருள்களையும் விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் பெரும்பாலும் DSC செல்களில் திரவ நிலையில்தான் சாயம் இருக்கும். மற்ற சோலார்செல்களில் எல்லாப் பொருள்களுமே திடநிலையில் இருக்கும்.



No comments:

Post a Comment