04 June, 2013

தாமஸ் ஆல்வா எடிசன் - இவரல்லவோ மனிதர்"Genius is one percent inspiration, ninety-nine percent perspiration."
– Thomas Alva Edison

தமிழில் ஒரு பழமொழி உண்டு. "அரை படி அரிசியில் அன்னதானம்; விடிகிற வரையில் மேளதாளம்". ஒரு சிறு சாதனையையோ, நல்ல காரியத்தையோ செய்து விட்டால் போதும் கூரை மேல் நின்று பறை சாற்றுகிற பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் சத்தமில்லாமல் பலவற்றை சாதித்து அடக்கமாக இருக்கும் மகத்தான மனிதர்களும் உள்ளனர்.

சாதனை என்ற சொல்லுக்கு உண்மையில் ஒரு மனிதரைக் காட்டச் சொன்னால் தாமஸ் ஆல்வா எடிசனை விடப் பொருத்தமானவரைக் காட்ட முடியாது. அவரது கண்டுபிடிப்புகள் ஆயிரத்திற்கும் மேல். வேறெந்த விஞ்ஞானியும் அந்த எண்ணிக்கையில் பாதி கூட வந்ததாகத் தகவல் இல்லை. அவர் செய்த சாதனைகளையும் விட அவருடைய மனப்பக்குவம் பெரியது என்றே சொல்ல வேண்டும். உதாரணத்துக்கு சில
நிகழ்வுகள்.....

அக்காலத்தில் மின்சாரத்தை சேமித்து வைக்கும்பேட்டரிகள் மிகக் கனமாகவும், எளிதில் உடைவதாகவும் இருந்தன. எடை குறைந்த உறுதியான பேட்டரியைக் கண்டு பிடிக்க முயன்றார் எடிசன்.

ஆராய்ச்சிகள் சுமார் ஒன்பது ஆண்டுகள் நடந்தன. சுமார் 8000க்கும் மேற்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. "எடிசனின் பேட்டரி கனவு முயற்சிகள் தோல்வி" என்று பத்திரிக்கைகள் திரும்பத் திரும்ப எழுதி வந்தன.

ஆனால் எடிசன் மனம் தளரவில்லை. "நாம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்யத் தயாராக இருந்தால், இயற்கையும் தன் ரகசியங்களை வெளிப்படுத்த மறுக்கப் போவதில்லை" என்று அவர் அடிக்கடி கூறுவார். 

ஒரு முறை ஒரு நிருபர் அவரிடம் கேட்டார். "தங்களுடைய 8000 ஆராய்ச்சிகளும் வீண் தானே?"

எடிசன் சொன்னார். "இல்லை. இந்த 8000 விதங்களில் எனது பேட்டரியை உருவாக்க முடியாது என்பதை நான் கண்டு பிடித்திருக்கிறேன். ஒரு வேளை நான் அந்த பேட்டரியை உருவாக்க முடியா விட்டாலும், எனக்குப் பின் வரும் விஞ்ஞானிகள் இந்த 8000 விதங்களைத் தவிர்த்து வேறு புதிய முறைகளில் தங்களது ஆராய்ச்சியைத் தொடரலாமே"

தன் முயற்சியின் பலன் தங்கள் பிள்ளைகளைத் தவிர வேறு எவருக்காவது போய் சேர்ந்தால் வயிறு எரிந்து சாகும் மனிதர்கள் மத்தியில் இவருக்கு எப்படிப்பட்ட பரந்த மனம் பாருங்கள்!

மேலும் 2000 முயற்சிகளுக்கும் பிறகு அவரே அந்த பேட்டரியை (nickel-iron-alkaline storage battery) கண்டு பிடித்தார்.

அக்காலத்தில் தாம் வசித்து வந்த நியூயார்க் நகரின் வீடுகளிலும், வீதிகளிலும் மின்சார விளக்குகள் ஒளிவீச வேண்டும் என்பது எடிசனின் ஆசை. ஆனால் கேஸ் மற்றும் எண்ணெய் விளக்குகளை மட்டும் உபயோகப்படுத்திக் கொண்டு இருந்த காலத்தில் அவரது ஆசை நிறைவேறும் என்று அவரைத் தவிர யாரும் நம்பவில்லை. விஞ்ஞானிகள் எடிசனுக்கு எதிராகத் தங்கள் கருத்துகள் மூன்றை ஆணித் தரமாகக் கூறினர்.

ஒன்று, மின்சாரத்தைப் பல இடங்களுக்கு வினியோகிக்க முடியாது. இரண்டு, அப்படியே முடிந்தாலும் ஒவ்வொருவரும் எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கணிக்க முடியாது. மூன்று, மின்சார விளக்கு கேஸ் லைட் போல மலிவானதல்ல. அக்காலக் கட்டத்தில் அறிவியல் அந்த அளவே வளர்ந்து இருந்ததால் அவர்கள் கூறியதில் உண்மை இருந்தது.

வழிகள் இல்லா விட்டால் அவை உருவாக்கப்பட வேண்டும் என்பது எடிசனின் சித்தாந்தம். அவர் தன் ஆராய்ச்சிக்கு உதவும் ஒவ்வொரு புத்தகத்தையும், கட்டுரையையும் விடாமல் படித்தார். 200 நோட்டுப் புத்தகங்களில் 40000 பக்கங்களுக்கும் மேற்பட்ட பக்கங்களில் தம் கருத்துக்களையும் வரைபடங்களையும் பதித்து ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். 

முடிவில் அவரது கனவு நனவானது. உலகிலேயே மின் விளக்குகளால் ஒளி பெற்ற நகரம் என்ற பெருமையை நியூயார்க் நகரம் பெற்றது.

பத்திரிக்கையாளர்களும், சக விஞ்ஞானிகளும் அவரைப் பாராட்ட ஓடோடிச் சென்ற போது அவர் தமது ஆராய்ச்சிக்கூடத்தில் வேறொரு ஆராய்ச்சியை ஆரம்பித்திருந்தார். அவரது மகத்தான ஆராய்ச்சி வெற்றி பற்றிக் கேட்ட போது அவர் சொன்னார்: "நேற்றைய கண்டுபிடிப்புகள் பற்றிப் பேசி இன்றைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை"

ஒரு சாதனை செய்து விட்டால் அதிலேயே மகிழ்ந்து திளைத்து மயங்கும் மனிதர்கள் மத்தியில், உலக சாதனை புரிந்த போதும் அதை நேற்றைய கண்டுபிடிப்பு என்று இயல்பாகக் கூறி அடுத்த சாதனை படைக்கக் கிளம்பிய இவர் அற்புத மனிதரேயல்லவா?

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும் செய்ததைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கும் பழக்கம் இல்லாததால் தான் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டிபிடிப்புகளுக்கான நேரம் அவரிடம் இருந்தது.

இளைஞர்களே, சோதனைகளைக் கடந்தே சாதனைகள் வரும். எடிசனின் "வெற்றியில் 1% அறிவு, 99% உழைப்பு" என்கிற வாசகம் பிரசித்தமானது"

அந்த ஒரு சதவீதத்தை இறைவன் நம் அனைவருக்கும் அளித்துள்ளான். அத்துடன் 99 சதவீத உழைப்பைச் சேர்த்தால் எவரும் எடிசனைப் போல சாதனைகள் படைக்கலாம்.

No comments:

Post a Comment